RSS

என்ன பெயர் வைக்கலாம்? – பகுதி 2

வருடம் 2021, செப்டம்பர் மாதம் 25ம் நாள்…

மாலை வேளையில் பனிக்குடம் உடைந்தபடி மருத்துவமனை வாசலை அடைந்தோம். இரவெல்லாம் வாயும் வயிறுமாய் வலியும் உயிருமாய் கடந்தது.

26ம் நாள் அதிகாலைபொழுதினில் பிரசவ அறை பிரவேசம்,

வலியின் அலறல், வலுவின்மை, நம்பிக்கையூட்டல், தன்னம்பிக்கை என அனைத்தும் மாறி மாறி நாழிகை செல்ல, “செல்ல மகள்” உலகை ரசிக்க உதயமானாள்.

இரண்டாம் முறையாக என் மனைவி எங்கள் மகளை பெற்றெடுத்து மூன்றாம் முறையாக மறுபிறவி பெற்றாள்

அனைத்தும் நலமாக…

என்ன பெயர் வைக்கலாம் ஆரம்பமானது தேடல் விளையாட்டு

இம்முறையும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். தாயும் தாரமும் அனுபவம் இருந்ததால் மறுக்கவே இல்லை

அ, இ, உ, ஏ – இவை தான் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள்

சிலர் பல பெயர்களையும், பலர் சில பெயர்களையும் பரிந்துரைத்தனர்.

அதில் சில பல,

அபிதா, அதிதி, அதுரா, அகலிகா, அக்சயா, அபிலா

இசை, இனிதா, இனியா, இலக்கியா, இந்திரா, இன்பா

உமா, உமையாள், உத்தமி, உதயா, உமாதேவி, உதயராணி

ஏழிசை, ஏலா, ஏகாபரனா

அகல்யா, இனிதா, இனியா, உமா – தாயின் பரிந்துரைகள்

அகல்யா அக்’ஷிதா, உத்தரா, அக்’ஷயா – தாரத்தின் பரிந்துரைகள்

பல பெயர்களை கடந்து வந்து, அகல்யா என அறுதியிட்டு உறுதி செய்தேன்

அகல்யா என்றால் ஒளி, பிரகாசிப்பது என்று பொருள்

அகல்யாவின் முதல் எழுத்து ‘அ’ – உயிர் எழுத்துக்களின் முதன்மை எழுத்து

இரண்டாம் எழுத்து ‘க’ – மெய் எழுத்துக்களில் முதல் எழுத்து

மூன்றால் எழுத்தான ‘ல்‘ – என்பது என் முதல் மகளான நிரல்யாவின் பெயர் காரண பதிவில் கூறியது போன்ற நிரல்நிறை அணியின் இரண்டாம் வரியாக கொள்ளலாம், அதாவது ‘ல்’ என்ற சொல் முதல் வரியில்(முதல் மகளுக்கு[நிரல்யா]) மூன்றாம் இடத்தில் இருப்பது போல, இரண்டாவது வரியில்(இரண்டாவது மகளுக்கும்[அகல்யா]) மூன்றாம் இடத்தில் அமைய பெற்று இருக்கும்

யா‘ என்பது (பெரும்பான்மையான)பெண்களுக்கே உரித்தான உயிர்+மெய்+நெடிலில்(ய்+ஆ) முடிய கூடிய எழுத்தாகும்

அகல்யா – பிரகாசிப்பவள் – வாழ்க வளமுடன்

(முதல் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)

 
1 Comment

Posted by on December 8, 2021 in அறிமுகம்

 

கவிதாசி

காதல் கொண்டது போல 

அவளை கண்டு சிரித்தான்

 

சிரிப்பை கண்டுகொள்ளாதபடியான

அவள் பார்வை, சற்றே அரும்பிய

மீசையை முறைத்தது, உண்மையில் வெறுத்தது

 

வந்தமர்ந்தவன் தயங்கியபடி

முதல் முறை என்றான்

 

உன் விழியிலேயே அது தெரிகிறது

உன் பெயரென்ன

 

கணநேர சிந்தனையில் அவனுக்கு அவனே

பெயரிட்டான் ஊரிட்டான் வேலையும் கொண்டான்

 

வருவோரிடம் சொல்லும் வழக்கமான

திரைகதையை சொன்னாள் அவள்

 

வீரமாக தாசிவீடு வந்தவன்

வந்ததை மறந்து தயங்கினான்

 

ஆயிரம் தயக்கத்தை கண்டவள்

அமைதிக்குள் செல்ல அழைப்பு விடுத்தாள்

 

அடிபணிந்தவனாய் அனைத்தும் செய்தான்

தத்துவம் பேசி “வழக்கம் போல்” ஒருவனானான்

 

சமாளிக்கும் திறமை இன்றியா

இதனை வருடம் பணம் பார்த்தாள்

 

பணம் கொடுத்து வாங்கிய நிமிடங்கள் முடிந்தது

விடை கொடுக்கும் தருணத்தில்,

அடுத்த ஆடவனுக்கான நேரம் ஆரம்பமானது

 

ஆனால் அவளுக்கான நேரம் முடிந்தது

 

குரல்வளை இரத்தம்

ஆடையில்லா அவனது உடலிலும்

இரக்கமில்லா அவனது கத்தியிலும்

 

உடலை உயிர் பிரியும் தருவாயை

உணர கூட முடியாதவளாய்

கண்களை மூடிகொண்டாள்

 

கறையை உடலில் இருந்தும்

தன்னை அகப்படலில் இருந்து அப்புறபடுத்தினான்

 

எத்தனையோ பேர்களை எப்படி எப்படியோ பார்த்தவள்

அத்தனையும் மாயை என பறைசாற்றி படுத்திருந்தாள்

 

வீடு வந்தவன், தன் சுயகுறிப்பு நாளேட்டை

சுய பிரகடனம் செய்தபடி

அவள் சென்ற இடம் தேடி காற்றாடியில் இவனும் சென்றான்

 

உடலை விற்க சென்றவள் உயிருடன் இல்லை என்பதை கூட அறியாமல்

தோழிகளுடன் சுற்றி திரிந்துவிட்டு மாலை வீடு சேர்ந்தாள்

வழக்கமாய் தாமதமாகும் அம்மாவுக்காக காத்திராமல்

தானே தன் வீட்டுபாடங்களை முடிக்க தன் பையை புரட்டினாள்

ஒரு புத்தகம் தன்னை அவசரபடுத்திக்கொண்டு கீழே விழுந்தது

“இனியாள்” 4’ம் வகுப்பு“ஆ” பிரிவு, சமூக அறிவியல்.

அவனது உடலை தாங்கிய காற்றடிக்கு விடுதலை கொடுத்தனர் சிலர்

அருகே இருந்த நாட்குறிப்பு,

யாரோ ஒருவளின் வாழ்நாள் குறிப்பென பறைசாற்றியது

அதன் கடைசி வரிகள்,

இனியாள் இனி நல்வாழ்வு வாழட்டும்

 

 
Leave a comment

Posted by on December 24, 2019 in Uncategorized

 

மாமியார் – மருமகள்

புகுந்த வீட்டில் வாழ்வதை பெண்கள் ஏன் வனவாசம் செல்வது போல் எண்ணி வருந்துகிறார்கள்?

இந்த கேள்வியை Quora என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் வினவ,

சிலர் கேள்விக்கு  கேள்வியாக கணைகளை தொடுகிறார்கள் இப்படியாக,

“ஒரு மாற்றத்திற்கு நீங்கள் மனைவி வீட்டில் சென்று வாழ்ந்து பாருங்களேன் .அப்போது புரியும்”

“எங்கே, உங்கள் மேனேஜர் அல்லது பிசினஸ் க்லையண்ட் வீட்டில் சென்று தங்கி வந்தபின் இதே கேள்வியைக் கேளுங்களேன் பார்ப்போம்?”

மேலும் சொல்கிறார்,

“காதல் திருமணமாய் இருக்கும் பட்சத்தில் கூட, அந்தப்பெண் பழகியது (பெரும்பாலும்) அந்த ஆணிடத்தில் மட்டும் தான். அக்குடும்பத்தினரோடு இருக்காது”

இதை வாசிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது, பெண் பழகியது அந்த  ஆணிடம் மட்டும் தான், அப்படியென்றால்  ஆண்  என்ன அந்த பெண் வீட்டாரின் தந்தை தாய் மற்றும் உறவினர்களோடும் சேர்த்தே பழகுகிறானா ?? ஆணும் பெண்ணுடன் மட்டும் தான் பழகுகிறான், ஆனால்  அவன் தனது காதலியின் பெற்றோரை  தவறாக மனதில் சித்தரித்து  வருவதில்லை. அதற்காக  பெண்ணை நான் குறை கூறவில்லை, புரிதல் இல்லாத காரணத்தால் (மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ) வாழ்வில் மகிழ்ச்சியை தொலைக்கிறார்கள்.

இதை சுதர்சனா சடகோபன் அவர்கள் அழகாக விவரிக்கிறார்,


ஒரு பெண்ணிடம் அவளது திருமண வாழ்வைப் பற்றியும், புகுந்த வீட்டைச் சுற்றியும் கூறப்படும் பல்வேறு கதைகளே அவளை அப்படி பயப்பட வைக்கிறது. எல்லா பெண்களும் இவ்வாறு எண்ணாவிட்டாலும், ஒரு சில பெண்கள் புகுந்தவீட்டிற்குச் செல்வதை வனவாசம் போலவே உணர்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

நமது சமுதாயம் சிறு வயது முதலாகவே பெண்களுக்கு ‘மாமியார்’ என்ற சொல்லை எதிர்மறையான சொல்லாகவே காட்டி வளர்க்கிறது.

  1. மாமியார் என்றால் மருமகள் கூட சண்டை மட்டுமே போடுபவள். (எவ்வளவு நகைச்சுவைத் துணுக்குகள் படித்திருப்போம் மாமியார்-மருமகள் சண்டையை மையமாக வைத்து)
  2. மாமியார் என்றால் கொடுமைக்காரி.
  3. மருமகளை வேலை வாங்குவதற்காகவே அந்த வீட்டில் வாழும் ஒரு ஜீவன். ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்கவைத்து கொலை கூட செய்பவள்! (இதுதான் காலங்காலமாக நம் தொலைக்காட்சித் தொடர்களில் சொல்லப்படும் காவியக் கதை)

இப்படி ஒரு தோற்றத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே நிறைய பேருக்கு இந்த புகுந்தவீட்டுப் பிரச்சனை இருக்கிறது.

கூடவே, திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சுற்றியிருப்போர் வழங்கும் அதிமேதாவித்தனமான அறிவுரைகள் மேலும் அந்த பயத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்குத் திருமணம் நிச்சயமான சமயத்தில் ஏற்கனவே திருமணமான என்னுடைய நெருக்கமான தோழி எனக்குச் சில அறிவுரைகள் வழங்குவதாகக் கூறி பின்வருமாறு கூறினார்:

“உன் மாமியார்கிட்ட மொதல்லயே பார்த்து நடந்துக்கோ. வேலை எல்லாம் செஞ்சு அவங்க சொல்றபடி கேட்டு அடங்கி மட்டும் நடந்திராத. அப்புறம் உன் தலையில் ஏறி மிளகா அரைச்சிடுவாங்க.”

நான் இப்படி ஒரு ‘அறிவுரையை’ எதிர்பார்க்கவே இல்லை. இதுதான் அவள் சொன்ன அறிவுரை என்று ஏற்கவே எனக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. என் கணவரைப் பெற்றெடுத்தவர் என்ற முறையில் என்றைக்கும் என் மாமியாரை மரியாதையோடு, மதிப்போடு, அன்போடு அணுகவேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். அவர்களைப் பற்றி நானாகவே எதையும் சித்தரித்துக் கொள்ளாமல் அவர்களைப் புரிந்து கொள்ளும் மனதுடன் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, முதலிலிருந்தே அவர்கள் சொல்வது எதையும் கேட்காமல் இருக்க வேண்டும் என்ற வார்த்தை ஏற்புடையதாக இல்லை. என் தோழியிடமும் அதையே கூறினேன்.

இன்று, எனக்கும் என் மாமியாருக்கும் இடையே அழகான உறவு இருக்கிறது. என் கணவரின் மீதுள்ள அன்பில் நாங்கள் இருவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

அடுத்து கிடைத்த அறிவுரை இதற்கும் ஒரு படி மேல். என் அண்ணனின் தோழி ஒருவர்,”நீயும் உன் மாமியாரும் சண்டை போடும்போது நீ அவர்களிடம் ஒன்றும் சொல்லாதே. உன் கணவரிடம் மட்டும் நடந்ததைக் கூறு. உன் கணவரும் நீ எதிர்ச்சண்டை எதுவும் போடாத காரணத்தினால் உனக்கே சாதகமாகப் பேசுவார். அதை விட்டுவிட்டு நீயாக உன் மாமியாரை எதிர்த்துப் பேசினால் உன் கணவரின் ஆதரவு கிடைக்காது. பிறகு சங்கடம்தான்” என்று அறிவுரை கூறினார். சண்டையில்லாமல் எப்படி புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று அறிவுரை கொடுக்க ஆளில்லை. ஆனால் போடுகிற சண்டையை எப்படி நமக்குச் சாதகமாக ஆக்க வேண்டும் என்று அறிவுரைகள் மட்டும் ஏராளம் வந்தவண்ணமிருந்தன.

இதுதான் நம் சமுதாயத்தின் பிரச்சனை. மாமியார் என்றாலே இப்படித்தான் என்று முத்திரை குத்திவிடுகிறோம். ‘மாமியார் என்றால் கொடுமைப்படுத்துவார், அதற்கு இடம் கொடுக்காதே’ என்றெல்லாம் அறிவுரை வழங்கி ஒரு பெண்ணை நாம் அனுப்பும் பொழுது, அந்தப் பெண் மாமியாரையும் நாற்றனாரையும் புலியும் கரடியுமாகத்தானே பார்ப்பாள்?! பின்னர் புகுந்த வீட்டிற்குள் போவது வனவாசம் போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

என் தோழியிடமிருந்து ஒரு மருமகளாக எனக்குக் கிடைத்த அறிவுரைகளைக் போலவே நம் ஊரில் மாமியார்களுக்கும் அவர்களுடைய தோழிகள் மூலம் பல அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ‘முதல்லயே அடக்கி வைக்கணும்’, ‘ரொம்ப இடம் கொடுக்காதே!’ ‘அவளை நீ உன் கைக்குள்ள வைக்கலைனா உன் பிள்ளை அப்புறம் உனக்கில்ல’ போன்றவை அவற்றுள் சில.

  1. மருமகள் என்றால் மோசமானவள்.
  2. வந்தவுடன் பிள்ளையை முந்தானையில் முடிந்து கொள்வாள்.
  3. வந்த உடனே மாமியாரிடமிருந்து உரிமைகளைப் பறித்துக் கொள்வாள்.

இப்படியெல்லாம்தான் நம் சமூகம் மருமகள்களைப் பற்றி மாமியாருக்கும் கற்றுத்தருகிறது.

இப்படித் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்றிக்கொண்டு, ‘மருமகள் என்றாலே இப்படித்தான்’ ‘மாமியார் என்றாலே இப்படித்தான்’ என அவர்கள் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டு பழகுவதாலேயே, அவர்கள் செய்யும் சாதாரணச் செயல்களைப் பார்த்தாலும் தவறாகவே தெரிகின்றது. இறுதியில் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு உறவு முறிந்துபோகிறது.

சமுதாயம் கற்றுக்கொடுத்த இம்மாதிரியான தேவையில்லாத stereotype-களைத் தூக்கி எறிந்துவிட்டு, மனதில் மாமியாரை/மருமகளைப் பற்றி தானாகவே தவறாக எதையும் யோசிக்காமல், நன்றாக அவர்களுடன் பேசி அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம் என்று மாமியார்-மருமகள் இருவரும் நினைத்தாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.

வருபவள் நம் மகனின் வாழ்க்கைத்துணை. அவளை அவளுக்குரிய மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கும்போது, மருமகள் மற்றுமோர் மகளாகவே தெரிவாள்.

நம் கணவனைப் பெற்றெடுத்தவர் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நாம் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு மருமகள்கள் செல்லும்பொழுது, புகுந்த வீடு தன் வீடாகவே தெரியும். வனவாசம் செய்யச் செல்லும் ஒரு காட்டைப் போல் தெரியாது.


இனி வரும் தலைமுறையாவது புரிதலோடு வாழ, இருக்கும் தலைமுறை புரிதலோடு இருக்க வேண்டும் என்று எண்ணியபடி பதிவிடுகிறேன்.

உபயம்: 1 & 2

என்றும் நட்புடன்,

பூபால அருண் குமரன் ரா

 

சிசு(க்காக) வதை

கார்காலம், மழை பொய்த்தால்
காத்திருக்கும் மாக்களே
பெண், சிசு பொய்த்தால்
வஞ்சிப்பது பேதைமையன்றோ !!!

நற்பண்பை தறி கொண்டு உரு செய்தால்
கற்போடு உதிப்பவள் பாவையன்றோ;
அவள் உணர்வில் பிழை காணும்
கணவர்கள் கயவர்களன்றோ !!!

sadlady

இறைவனை சாட்சியாக்கி இணைந்த நம் உள்ளம்
குழந்தை இல்லாமையை காட்சியாக்கி பிரிவது;
காத்திருப்பை காரணம் காட்டி
இறைவனின் தரிசனம் இழப்பது போலல்லவா !

இன்பதுன்பமாய் இரவுபகலாய்
எதிலும் பங்கு கொள்ளவே
வேலியாய் தாலி கொண்டேன்
உன்னுடல் பாதி கொண்டேன்

சிசுவை சுமக்கும் கடமைகொண்டதால்
எனை மட்டும் ஏளனம் கொண்டாயோ
இல்லை,
என்னையே காரணமாய் கண்டாயோ ?

Young Couple Relaxing on Park Bench

என் தாய் எனை கொஞ்சிய பொழுதுகளை
என் சேயோடு நான் பாட காத்திருக்கிறேன்

எந்தை என்னோடு விளையாடி காலங்களை
உன்னோடு நம் சேய் களிக்க காத்திருக்கிறேன்

பிஞ்சிக் கைகளை முத்தம் கொடுக்க
குட்டிக் கால்களை தொட்டு பார்க்க
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
மாற்றான் சேயாதலால் மாற்று குறைந்தவள் நானல்லவா !!!

childhand

என்னுள் என் சேய் உருள்வதை உணரும் நன்னாள்
எந்நாள் என இந்நாள் வரையில் என்னால் இயன்றவரை
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

 

தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா

 

என்ன பெயர் வைக்கலாம்? – பகுதி 1

ஜனவரி மாதம் 13ம் தேதி பிறந்த எனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என தேடிக் கொண்டிருந்த சமயம்…

பலரும் தங்களின் மனதில் கொண்டிருந்த விருப்பமான பெயர்களை கூறினார்கள். அது மற்றுமின்றி பல வலைதளங்களும் தங்கள் விருப்பத்தை பிரதிபலித்தது.

நான் மட்டுமே பெயரை முடிவு செய்வேன், அதுவும் தமிழில் தான் வைப்பேன் என்றதும், எனக்கு தமிழை ஊட்டி வளர்த்து என்னை தமிழ்த் தாய்க்கும் மகனாக்கிய எனது தாய் சம்மதம் கூறினார். கூடவே மனைவியும் சம்மதித்தாள்.

me.jpg

இணையமே துணையாய் அலசி ஆராய்ந்து சில பெயர்களை தேர்வு செய்தாகிவிட்டது

நிறைமதி – முழுநிலவு
நறுவிழி – அழகான கண்கள்
நிலா
நித்திலா – முத்து(Pearl)
நிரல்யா – பூரணம், வரிசை (Perfect, Order)
நன்மொழி
நந்தினி – காமதேனுவின் மகள்

சில சம்ஸ்கிருத பெயர்களும்,
நிதுளா – (தெரியலப்பா)
நேத்ரா – விழிகள்

தேர்ந்தெடுத்த தமிழ் பெயர்களிலே வித்தியாசமாகவும் புதியதாகவும் இருப்பது,
நித்திலாவும், நிரல்யாவும்…

நித்திலம் என்பது நவரத்தினங்களில் ஒன்றான முத்து என்பதாகும்
நிரல் என்பது முழுமை அடைந்த அல்லது வரிசையான என்பதாகும்

பெயர்களை எல்லாம் எழுதி, இறைவன் திருவடியில் கொடுத்து, ஒன்றை மட்டும் வேண்டிக் கொண்டோம்.
இறைவனே அருளிய பெயர்: நிரல்யா

b30a3d8a66e6c45e64943d8d59700175.jpg

கவி முடத்தாமக் கண்ணியார் அவர்கள் சோழன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாய் கொண்டு அருளியது பொருநர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டுகளில் இரண்டாவது பாட்டு. அதில்,

“முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்”
–(பொருநராற்றுப்படை 113-114)

என்ற வரிகளில் நிரல் என்ற சொல், குறைபாடுகள் அல்லாத என்ற அர்த்தம் கொண்டு,

முல்லை மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முறியாத அரிசி
விரலைப்போல் நீண்ட ஒன்றோடொன்று சேராத குறைபாடற்ற சோற்றையும்”

என்று பொருள் படும்படி பாடி இருப்பார்.

Porunar_Aatrupadai

மேலும்,
அணி இலக்கணத்தில், அணிகளில் ஒன்றாக நிரல்நிறை அணி குறிப்பிடப்படுகிறது

“நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்”

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
–(திருக்குறள், 45)

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.

இங்கே நிரல் என்பது வரிசையாக என குறிப்பிடப்படுகிறது…

ஆக,

நல்ல தமிழ் பெயராகவும், புதியதாகவும் இருக்கும்படியாக நிரல்யா என்ற பெயரையே வைத்துவிட்டோம்.

நிரல்யா – முழுமையானவள் – வாழ்க வளமுடன்

(இரண்டாம் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)